பொலிஸார் என கூறி முன்னாள் போராளி ஒருவரை அடித்து பணம் பறித்தவர்கள் தொடர்பில் இளவாலை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
இளவாலை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி முன்னாள் போராளியான ந.தில்லைமோகன் என்பவரை மறித்த குழுவினர் தாம் பொலிஸார் என கூறி அடித்து, அடையாள அட்டை பணம் என்பவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பில் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட குறித்த நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். அத்துடன் குறித்த குழுவினரை அடையாளம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அக் குழுவினர் பொலிஸாருடன் நின்றதனையும் தான் அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்து பொலிஸாரிடம் இது தொடர்பில் விளக்கம் கோருமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் குறித்த நபர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

