மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி

14 0

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு, முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கோழி வளர்ப்பில் 2022இல் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் நாடு தற்போது அதிலிருந்து மீண்டு, 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, மாதமொன்றுக்கு 6 இலட்சம் என்றளவில் முட்டை உற்பத்தி அதிகரித்து வருகிறது.

உண்மையிலேயே, முட்டையின் விலை 30 ரூபாயாக குறையும் நிலை கூட உண்டாகும். இது எமது தொழில் துறையில் பாரியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

மதிய உணவுத் திட்டத்தில் முட்டையை சேர்க்க வேண்டும் என்பதோடு, முட்டைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஆராயும்படி அரசாங்க தரப்பிடம் கோரியுள்ளோம் என்றார்.

இதேவேளை, தற்போது கோழித் தீவனத்தின் விலை 180 ரூபாயாக குறைந்துள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க கூறியுள்ளார்.

கோழி முட்டை விற்பனையின் எதிர்கால நிலை பற்றி அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

2022இல் 240 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த ஒரு கிலோ கோழித் தீவனத்தின் விலை தற்போது 180 ரூபாயாக குறைந்துள்ளது. ஆகவே, விவசாயிகளுக்கு 40 ரூபாய் கிடைத்தால் எம்மால் இந்த தொழிலை தொடர முடியும்.

முட்டையின் விலை 35 ரூபாயாக குறைந்தால் சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அரசாங்கம் அதிகமான கோழிகளை இறக்குமதி செய்துள்ளது. இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முட்டைகளினதும் கோழிக் குஞ்சுகளினதும் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்தார்.