தேசிய பொருளாதாரத்தில் தோட்டத் தொழிலாளர்களின் தொடர் பங்களிப்பு

25 0

இரு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊடாக தேசிய கடன் மறுசீரமைப்புக்குப் பங்களிப்பு செய்யும் அதேவேளை, அதற்குப் பொறுப்பான மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட விடயம் கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், சம்பள அதிகரிப்பு தொடர்பில் தன்னால் எதனையும் கூறமுடியாது எனவும், இருப்பினும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பதிலளித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பணிபுரியும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தற்போது அவர்கள் தமது ஊழயர் சேமலாப நிதிய சேமிப்பின் ஊடாக உள்ளகக் கடன் மறுசீரமைப்புக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் பொறுப்பானவர்கள் மனசாட்சியின்றி பெருமளவால் தமது சம்பளத்தை அதிகரிக்கின்றனர் எனவும் சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.