போதைப்பொருள் தொடர்பான ஐ.நா ஆணைக்குழுவின் 67 ஆவது கூட்டத்தில் ‘யுக்திய’ நடவடிக்கை குறித்து கரிசனை

40 0

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டம் மற்றும் பொலிஸாரின் பணிகள் இராணுவமயப்படுத்தப்படல் ஆகியவற்றின் எதிர்மறை விளைவுகள் குறித்து போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 67 ஆவது கூட்டத்தில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக நடைபெற்ற போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 67 ஆவது கூட்டத்தில் ‘போதைப்பொருளுக்கு எதிரான போர் இம்மனித உரிமைகள்சார் சவாலைக் கையாள்வதற்கான இராணுவமயமாக்கல் மற்றும் அவசரகாலநிலை அணுகுமுறைகள்’ எனும் தலைப்பின்கீழ் உரையாற்றுகையிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

குறிப்பாக அண்மையகாலங்களில் உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான போர் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கமைய இலங்கையிலும் இவ்விரு விடயங்களும் இணைந்த வடிவத்திலேயே நோக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் நீட்சியாக அதிகரித்த இராணுவமயமாக்கல் மற்றும் அதன் விளைவாக மனித உரிமைகள்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்துப் பிரஸ்தாபித்த அவர், இலங்கையில் அதிகரித்துவரும் பொலிஸாரின் பணிகள் இராணுவமயப்படுத்தப்படல் அல்லது இராணுவத்தினரால் பொலிஸாரின் பணிகள் மேற்கொள்ளப்படல் போக்கு தொடர்பில் விளக்கமளித்தார்.

குறிப்பாக இலங்கையில் ‘யுக்திய’ எனப்படும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டம் கடந்த 3 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், இதன்கீழ் கடந்த 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 72,850 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், 2322 பேர் கட்டாய போதைப்பொருள் மீட்சி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அம்பிகா சற்குணநாதன், இருப்பினும் இம்மூன்று மாதகாலப்பகுதியில் வெறுமனே 29.4 கிலோகிராம் உள்ளிட்ட சொற்பளவான போதைப்பொருட்களே கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

எனவே இங்கு போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களும், சிறியளவில் அவற்றை விற்பனை செய்பவர்களுமே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், மாறாக பாரியளவு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், அவர்கள் அனுபவித்துவரும் பாதுகாப்பு தொடர்பிலும் கரிசனை வெளியிட்டார்.