அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை மையப்படுத்திய கூட்டணியை அமைப்பதையே நாம் நோக்கமாக கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக இடதுசாரிக் கொள்கையுடையவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குராட்பணம் இடம்பெற்றுள்ள நிலையில் அதன் அடுத்தகட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் புதிய மாற்றம் ஒன்றை நோக்கியே புதிய கூட்டணியை ஒருங்கிணைத்துள்ளோம். இந்தக் கூட்டணியான, கொள்கையளவில் இணைந்து செயற்படக்கூடியவர்களுடன் கைகோர்ப்பதற்கு தயாராக உள்ளது.
அந்த வகையில் இடதுசாரிச் சிந்தனையுடையவர்களுடன் அடுத்தகட்டமாக பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்தச்செயற்பாட்டில் புத்திஜீவிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எம்முடன் கைகோர்ப்பதற்கு தயாராக உள்ளனர்.
இந்நிலையில், அடுத்து ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் அதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாகவுள்ளது.
அவ்வாறு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் நாம் பரந்து பட்ட கூட்டணியில் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளோம். ஆனால் அந்தக் கூட்டணியானது, பொதுவேட்பாளர் ஒருவரை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். கொள்கையளவில் இணைந்து பயணிக்க கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும்.
இந்த விடயங்கள் சம்பந்தமாக அடுத்து வரும் நாட்களில் நாம் தீவிரமாக ஆராய்ந்து எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோம் என்றார்.

