வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தகவல்

226 0

ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்கனவே 2 தடவை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இன்று 3-வது முறையாக இறுதி கட்ட பயிற்சி வகுப்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், மற்றும் சிறப்பு பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாது. ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் தமிழ்நாடு காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பர்.

முகவர்கள், வெளியாட்கள் உள்ளிட்ட யாரும் வாக்குசாவடிக்குள் செல்ல முடியாது. அனைத்துவாக்கு சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதன் மூலம் வாக்கு செலுத்துபவர்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவார்கள்.ஆர்.கே.நகரின் முக்கிய தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பார்வையிட தனிக்குழுக்கள் உள்ளன.

சிறிய சந்துகளில் நுண் பார்வையாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று கண்காணிப்பார்கள். 30 குழுக்களாக பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து தேர்தல் பணிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். வாக்கு சாவடியில் நடைபெறும் நிகழ்வுகளை பொதுமக்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் நேரடியாக பார்க்கலாம்.

யாருக்கு வாக்களிக்கலாம் என்று அறியும் வி.வி.பேக்கில் இருந்து ரசீது எடுக்க முடியாது. அதில் பார்க்க மட்டுமே முடியும்.வெளியூர் ஆட்கள் 10-ந்தேதி மாலையுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.