ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா புகார்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் திங்கட்கிழமை ஆலோசனை

325 0

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் டெல்லியில் திங்கட்கிழமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் டெல்லியில் திங்கட்கிழமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனையில், ரூ.89 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் இன்று வெளியாகின. இந்த ஆவணங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட 6 அமைச்சர்களின் பெயர்களும் உள்ளன. பணப் பட்டுவாடா தொடர்புடைய தகவலும் அதில் உள்ளன.

தற்போது வெளியாகியிருக்கும் ஆவணங்களின்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்களை, தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை வழங்கி உள்ளது. இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரியிடம், தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

எனவே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் திங்கட்கிழமை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக விக்ரம் பத்ரா இன்று டெல்லி சென்றார். ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திங்கட்கிழமை நடைபெறும் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பான புகார்கள் குறித்து விரிவாக ஆராயப்படும். அத்துடன், வருமான வரித்துறை அளித்த பணப் பட்டுவாடா தொடர்பான ஆவணங்களும் சரிபார்க்கப்படும். அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது.

பணப் பட்டுவாடா நடப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சில தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், டெல்லியில் திங்கட்கிழமை நடக்கும் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.