தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் அணி புகார்

207 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினர் புகார் மனு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியதாவது:-

மதுசூதனனுக்கு தினமும் ஆதரவு பெருகிக்கொண்டிருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் டி.டி.வி.தினகரன் குண்டர்களை வைத்து வன்முறையில் இறங்கியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் வாக்குகளை சேகரித்தபோது குண்டர்கள் வந்து சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் அளவில் நடந்துகொண்டனர்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத், கார் டிரைவர் சிவா ஆகியோர் வன்முறையில் ஈடுபட்டதாக டி.டி.வி.தினகரன் அரசு எந்திரங்களை தன்வசப்படுத்தி புகார் பெறவைத்திருக்கிறார். அந்தப் புகாரை போலீசார் ஏற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு அரசு எந்திரம் அடிமையாக மாறியிருக்கிறது.

இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கூறியிருக்கிறோம். ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்திருந்தாலும்கூட, டி.டி.வி.தினகரனையும் அந்தக் குடும்பத்தினரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலாவின் அக்கா மகன் என்று தெரிந்திருப்பதால், அவர் என்ன செய்தாலும் ஏற்கமாட்டோம் என்ற நிலையில் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

தற்போது அவரால் தூண்டப்படும் வன்முறையால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளோம்.வருமான வரி சோதனை நடந்துவருவது அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையிலானது. இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கக்கூடிய நபராக டி.டி.வி.தினகரன் தற்போது இருக்கிறார்.

வாக்காளர்களுக்கு நாங்கள் டோக்கன் கொடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருப்பது ஆதாரமற்றது.ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம்போல சித்தரித்து பிரசாரத்தில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. யாரோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட தொண்டர் அந்த செயலை செய்திருக்கிறார். அந்த தகவல் கிடைத்ததும் அதை உடனே அப்புறப்படுத்த சொல்லிவிட்டோம். அந்தத் தொண்டரையும் கண்டித்திருக்கிறோம். அவரும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அங்கு இருந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனும் அதை ஏற்கவில்லை. பணப்பட்டுவாடாவில் தி.மு.க.வும் ஈடுபடுவதாக சொல்கிறார்கள். அவர்கள் மக்களை நம்பவில்லை. நாங்கள் மக்களை நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.