ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது – வெளியூர் கட்சி பிரமுகர்கள் வெளியேற உத்தரவு

220 0

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது. வெளியூர் கட்சி பிரமுகர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை(திங்கட்கிழமை) ஓய்கிறது. வெளியூர் கட்சி பிரமுகர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராகவும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து காலியிடமாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 16-ந்தேதி தொடங்கி, மார்ச் 23-ந்தேதி வரை நடந்தது. மொத்தம் 127 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில் 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 82 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாற்று வேட்பாளர்கள் போக, 70 பேர் களத்தில் இருந்தனர்.

மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான மார்ச் 27-ந்தேதி 8 பேர் தங்கள் மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் தொகுதியில் போட்டியிடும் 62 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தி.மு.க. கூட்டணி கட்சிகளும், அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர்.

சசிகலா அணி சார்பில் வேட்பாளர் டி.டி.வி. தினகரனும் வீதி, வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தங்கள் அணியின் வேட்பாளரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வமும் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டுள்ளார். விஜயகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஆர்.கே.நகரில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தங்கள் ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

அதனை தொடர்ந்து, வெளியூர்களில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்து வரும் வெளியூர் கட்சி பிரமுகர்கள் நாளை அங்கிருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி நேற்று தண்டையார்ப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வழங்கப்பட்டது. இதில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்தும், அதை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு எப்படி பொருத்த வேண்டும், வாக்குப்பதிவு முடிந்ததும் எவ்வாறு ‘சீல்’ செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

இதை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் பார்வையிட்டார். அவருடன் தேர்தல் காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் பி.நாயர் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள் எந்தவித அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகர போலீஸ் மற்றும் மாநகராட்சி செய்து வருகிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பு தருவதோடு, வாக்குச்சாவடிக்குள் இருக்கும் முகவர்கள், வேறு யாரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாதவாறு பார்த்துக்கொள்வார்கள். அவர்களுடன் மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

இதுவரை 140 பேர் தேர்தல் விதிமுறையை மீறி நடந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.29 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் முக்கியமான அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தி இருந்தோம். அதில் பதிவான காட்சிகள் அனைத்தையும் தற்போது பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதில் சந்தேகத்துக்கிடமாக ஏதாவது சம்பவங்கள் நடந்ததாகவோ, சந்தேகத்துக்கிடமாக வாகனங்கள் வந்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவோ இருக்கிறதா? என்பதை சிறப்பு குழுக்கள் பார்த்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப்-கேமரா பொருத்தப்பட இருக்கிறது. அதில் வரும் வீடியோக்களை பல குழுக்கள் கண்காணிக்க இருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் எந்த மாதிரியான மக்கள் வந்து போகிறார்கள் என்பதை கண்காணிக்க அங்கேயும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

அதை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஏற்றவகையில் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. அது எந்த இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.