சிரியா மீது தாக்குதல்: டிரம்ப் நடவடிக்கையை கண்டித்த ஹிலாரி கிளிண்டன்

236 0

சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு, ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின் மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில், ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் விமானப்படைத் தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை தீக்கிரையாகின. அங்கிருந்த ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதற்கு, வெளியுறவுத் துறை முன்னாள் மந்திரி ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சிரியாவில் தாக்குதல் நடத்தியதன்மூலம், இனி சிரியா குழந்தைகளை பாதுகாப்பதாக நம்மால் பேச முடியாது. அடுத்து அவர்களுக்கான அமெரிக்காவின் கதவு மூடப்படும் என்பதை அமெரிக்க நிர்வாகம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் ஹிலாரி கிளிண்டன்.

ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தபோதும், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதும், சிரிய அதிபரின் கண்மூடித்தனமான தாக்குதலை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா விமான தாக்குதலை தொடங்குவற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியிலும் ஹிலாரி இதே நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.