அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியப்பெண் பேராசிரியை உயர் பதவியில் நியமனம்

220 0

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் தகவல், ஒழுங்குமுறை விவகாரத்துறை அலுவலகத்தின் நிர்வாகி பதவியில் இந்தியப்பெண் பேராசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டில் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிற ஆன்டனின் ஸ்காலியா சட்டக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர், நியோமி ராவ். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.இவரை தனது தகவல், ஒழுங்குமுறை விவகாரத்துறை அலுவலகத்தின் நிர்வாகி பதவியில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இந்த அலுவலகம், நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் ஒரு அங்கமாக, ஜனாதிபதி அலுவலகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.இந்த அலுவலகம் மத்திய அமைப்புகளின் விதிமுறைகளை பரிசீலித்து, அவை ஜனாதிபதியின் நோக்கத்துக்கு உகந்ததாக இல்லை என்கிறபோது, அவற்றை நிராகரிக்கிற அதிகாரத்தை பெற்றதாகும்.

நியோமி ராவை இந்தப் பதவியில் அமர்த்தி இருப்பது குறித்து ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு வெளியிட்டுள்ள செய்தியில், “ஒழுங்குமுறை சீர்திருத்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் முக்கிய கவனம் கொண்டுள்ளது என்பதையே நியோமி ராவின் நியமனம் காட்டுகிறது என்றும், வெறும் ஒழுங்குமுறை சுமைகளை குறைத்துக்கொள்ளுவதே மட்டுமே அல்ல என்றும் காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், “நன்கு மதிக்கப்படுகிற நிர்வாக சட்ட வல்லுனரை தேர்வு செய்திருப்பது, நிர்வாக நடவடிக்கைகளில் சட்ட தடைகள் குறித்து கவனம் செலுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது என்பதை நிர்வாகம் உணர்ந்து கொண்டுள்ளது. நியோமி ராவ் அந்த வகையில் ஒரு உயர்வான தேர்வு ஆகும்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜார்ஜ் டபிள்யு புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றியபோது அவரது இணை ஆலோசகராக நியோமி ராவ் பணியாற்றி உள்ளார்.லண்டனில் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர். அமெரிக்காவின் புகழ்மிக்க யேல் பல்கலைக்கழகத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் கற்று பட்டம், உயர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோன்று, அறிவுசார் சொத்துக்கள் அமலாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொருவரான விஷால் அமின் நியமிக்கப்பட்டுள்ளார்.