விமல் வீரவன்சவின் கருத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு – சாணக்கியன் கடும் சாடல்

14 0

வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் இனவாதத்தை பேசி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குறிப்பிட்ட கருத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட முடியும் என  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சட்ட விரோதமாக எம்மவர்கள் கைது செய்யப்பட்டதற்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாங்கள் இனவாதம் பேசவில்லை. இனவாதத்தை பிரதான கொள்கையாக கொண்டு செயற்பட்ட இவரது அரசியல் கேள்விக்குள்ளாகியுள்ளது.எந்த கட்சியிலும் இவரால் போட்டியிட முடியாது. ஆகவே இந்த இனவாதிகள் நாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடுமையாக  சாடினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற  அமர்வின் போது ‘ வெடுக்குநாறி மலை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளும்,மலையக பிரதிநிதிகளும் சபையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச,

வவுனியாவில் வடுநாகல தொல்பொருள் இடம் வரலாற்று ரீதியில் சிறப்பு மிக்கது.சிங்கள பௌத்த மரபுரிமைகள்  அங்கு காணப்படுகின்றன நிலையில் ஒரு தரப்பினர் இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பௌத்த மரபுரிமைகளுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

வெடுக்குநாறி மாலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் பொறுப்பாகும்.இந்த கைது விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளை பலியாக்க வேண்டாம் என்றார்.

விமல் வீரவன்சவின் இந்த கருத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்கள்.அதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு மாத்திரம் உரையாற்றுவதற்கு  அனுமதி வழங்கப்பட்டது.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.மத வழிபாடுகளுக்கு சென்றவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து இடையூறுகள் விளைவிக்கப்பட்டன.பொலிஸார் முறையற்ற வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி 08 பேரை கைது செய்தார்கள்.அதன் பின்னரே தொல்பொருள் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்தது.எவரும் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய விமல் வீரவன்ச, வெடுக்குநாறி மலை சிங்கள பௌத்த மரபுரிமைகளை கொண்டுள்ளது.அங்கு வழிபாடுகளுக்கு சென்றவர்கள் தமது உரிமை தொடர்பில் வாக்குவாதம் செய்துள்ளார்கள்.இதன்போது தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சபையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதிநிதிகள் இனவாதம்,மதவாதம் என்பனவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.தமிழ் மக்கள் இவர்களை புறக்கணிக்கிறார்கள். இவர்களின் செல்வாக்கு குறைந்து விட்டது.இடம்பெறவுள்ள தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இனவாதம் பேசுகிறார்கள்.ஆகவே பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ‘ சபையில் உரையாற்றுவதற்கு எமக்கு அனுமதி தாருங்கள்.இவர் குறிப்பிடும் பொய்களுக்கு (விமல் வீரவன்சவை நோக்கி) பதிலளிக்க வேண்டும்.இல்லையென்றால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள்.

வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.எம்மவர்கள் சட்டவிரோதமான  முறையில் கைது செய்யப்பட்டார்கள். அதனையே நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.இனவாதத்துடன் நாங்கள் செயற்படவில்லை.எமது செல்வாக்கு நிலையானது. இந்த முறை எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது இவருக்கு பிரச்சினையாகவுள்ளது.ஆகவே இனவாத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் இவர் புறக்கணிக்கப்பட வேண்டும் என கடுமையாக சாடினார்.