கோப் குழுவின் தலைவர் ரோஹித்தவுக்கு கடும் எதிர்ப்பு

27 0

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோப் குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர். இதற்கமைய கோப் குழுவின் 07 உறுப்பினர்கள் நேற்று இராஜினாமா செய்துள்ளனர்.

கோப் குழுவில் இருந்து  திங்கட்கிழமை (18) ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண பதவி விலகியதுடன், நேற்றைய தினத்தில் எதிரணி சுயாதீன எம்.பி தயாசிறி ஜயசேகர, சரித ஹேரத், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களான  ஹேஷா விதானகே,நளின் பண்டார,எஸ்.எம்.மரிக்கார் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

பதவி விலகல் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (19) தயாசிறி ஜயசேகர,ஹேஷா விதானகே, சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்தி தமது தீர்மானத்தை அறிவித்தனர்.

சுயாதீன உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு முக்கியமானது.என்.எம்.பெரேரா,  உள்ளிட்ட படித்த திறமையானவர்கள் கோப் குழுவின் தலைவராக பதவி வகித்துள்ளார்கள். கோப் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தமது பெரும்பான்மையை பயன்படுத்தி அந்த தலைவர் பதவியையும் பறித்துக் கொண்டது.

ஆளும் தரப்பின் உறுப்பினர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவராக செயற்பட்ட போது கிரிக்கெட் விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது அவர் சைகை முறையில் ஒருசிலரை பாதுகாத்தார்.இவரது முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டி அவரை குழுவில் இருந்து நீக்குமாறு  வலியுறுத்தினோம்.தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ளாமல் பாராளுமன்ற  கூட்டத்தொடரை ஒத்திவைத்தது.

புதிய கூட்டத்தொடர் ஆரம்பமானவுடன் கோப் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டோம்.ஆனால் அரசாங்கம் முறையற்ற வகையில் கோப் குழுவின் தலைராக ரோஹித்த அபேகுணவர்தனவை நியமித்துள்ளது.இவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதுடன்,பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறானவரை தலைமைத்துவமாக வைத்துக்கொண்டு எம்மால் செயற்பட முடியாது என்பதால் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் கோப் குழுவின் தலைவர் பதவியை நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு வழங்கினோம்.2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த முறைமை மாற்றியமைக்கப்பட்டு ஆளும் தரப்புக்கு அந்த பதவி வழங்கப்படுகிறது.பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ரோஹித்த அபேகுணவர்தன எவ்வாறு அரச அதிகாரிகளை கேள்வி கேட்க முடியும்.ஆகவே இவரது தலைமையில்  எம்மால் செயற்பட முடியாது என்பதால் குழுவில் இருந்து விலகியுள்ளோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்றும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.கோப் குழுவின் தலைவராக ரோஹித்த அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமை முறையற்றது.இவர் எவ்வாறு அனைவருடனும் இணக்கமாக செயற்படுவார்.பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற போது என்னை தாக்குவதற்கு முற்பட்டார்.

கடந்த காலங்களில் கோப் குழுவில் ராஜபக்ஷர்களின் மோசடிகள் வெளிக் கொண்டு வரப்பட்டன.இவர் ராஜபக்ஷர்களுக்கு சார்பானவர் ஆகவே இனி சிறந்ததொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.ஆகவே கோப் குழுவில் பதவி வகித்து எமது பெயருக்கு இழுக்கு ஏற்பட அனுமதிக்க முடியாது.கோப் குழு இனி  ‘கமிட்டி ஒன் போஹட்டு என்டர்பிரைசஸ்’ என்ற அடிப்படையில் செயற்படும் என்றார்.