அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கு சட்டமூலம்

98 0

அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2023 ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும், ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு தற்போது காணப்படுகின்ற தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டிய தேவையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து அரசியற் கட்சிகளிள் தலைவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் குறித்த தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கும், எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறை மூலம் தேசிய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் தேர்ந்தெடுப்பதற்கும் குறித்த குழுவுக்கு கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலானவர்கள் அதற்கான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு தேவையான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.