புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசியல் வேலைத்திட்டம்:மைத்திரிபால சிறிசேன

261 0

புத்தாண்டுக்கு பின்னர், குறைகள், தாமதங்களை போக்கி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பிரதான தேவையென கருதி அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அமைச்சரவை மாற்றம் மட்டும் போதுமானதல்ல என்பதால், மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்கள் அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.மக்கள் இந்த நம்பிக்கையை இழக்கும் முன்னர் புதிய வேலைத்திட்டத்துடன் புதிய பயணத்தை ஆரம்பிப்போம். தூய்மையான அரசியல் அமைப்பொன்று தேவை என்ற தாகத்தில் இலங்கை தவித்து வருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இளமையான வலுவை சேர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த தலைமைத்துவத்தை வழங்குவேன்.தற்போது எவர் மீதும் குற்றங்களை சுமத்தி பயனில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வுகாண வேண்டும்.இரு கட்சிகள் இணைந்த இணக்க அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். மேலும் இந்த வருடத்தின் இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.