திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் கைப்பேசி திடீரென ஒலித்தமைக்கு ஆணைக்குழுவின் தலைவரான உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்திரசிறி கடுமையாக எச்சரித்தார்.
நீதிமன்றமொன்றில் பிரசன்னமாகியிருக்கும் எவரும் நீதிமன்றப் பணிகள் முடியும்வரை தமது கைப்பேசிகளை அணைத்து வைக்கவேண்டியது முக்கியம் எனவும், அவ்வாறு செய்யாமல் அவற்றை ஒலிக்கவிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் நீதியரசர் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான கே.டி.சித்திரசிறி (தலைவர்), பிரசன்ன ஜயவர்தன மற்றும் முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் அடங்கிய ஆயத்தின் முன் இந்த விசாரணைகள் நடந்துவருகின்றன.
அர்ஜுன மகேந்திரனின் சாட்சியம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டபோதிலும் அவர் ஆணைக்குழுவின் தொடர் அமர்வுகளைக் கண்காணிக்கவேண்டுமென விடுத்த வேண்டுகோளுக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. அவ்வாறான கண்காணிப்புக்கு நேற்று பிரசன்னமாகியிருந்தபோதே அவரது தொலைபேசி எதிர்பாராதவிதமாக ஒலித்திருக்கின்றது.

