சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!

24 0

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு  நுவரெலியா மேல் நீதி மன்றம்  10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று புதன்கிழமை (13)   வழங்கி தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த நபர், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு குறைவான பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து  இந்த  நபர் மீது நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது குற்றவாளியாக  இனங்காணப்பட்ட நபருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு இன்று  வழங்கப்பட்டது.

இதன்போது குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட  52 வயதுடைய நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அதேநேரத்தில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அத்துடன் குற்றவாளிக்கு நீதி மன்ற தண்டனை பணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இந்த தண்டனை பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும்  தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.