ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும், அடுத்து வரும் அரசாங்கத்துக்கு அந்த ஒப்பந்தத்தை அவ்வாறே செயற்படுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவும், எதிர்வரும் சில மாதங்களில் ஆட்சியைக் கைப்பற்றவுள்ள கட்சியாகவும் சர்வதேச கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளில் எம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன்களின் பெருமளவானவை கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், எனவே அவற்றை மீள செலுத்த முடியாது என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
நாட்டுக்காக பெற்ற கடனை கொள்ளையடித்தது யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த சம்பவம் சர்வதேச கடன் மறுசீரமைப்பில் எதிர்மறையான தாக்கத்தினை செலுத்தும்.
முத்தரப்பு கடன் தொடர்பில் பரிஸ் கிளப் நாடுகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று எட்டப்பட வேண்டும்.
அடுத்த மாதம் வொஷிங்டனில் இடம்பெறவுள்ள சர்வதேச நாணயம், உலக வங்கியுடனான பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பில் பேசவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவற்றுக்கு அப்பால் சுமார் 17 பில்லியன் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டையும் எட்ட வேண்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் சில மாதங்களே பதவிக் காலம் இருக்கிறது. எனவே அடுத்து ஆட்சியமைக்கவுள்ள அரசாங்கத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொறுப்புக்கள் காணப்படுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும், அடுத்து வரும் அரசாங்கத்துக்கு அந்த ஒப்பந்தத்தை அவ்வாறே செயற்படுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.
அவ்வாறில்லை என்றால் மீண்டும் வங்குரோத்தடைந்த நாடாக இலங்கை அறிவிக்கப்படும். எனவே தான் அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படாமலிருப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளில் எம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரினோம்.
இன்னும் சில மாதங்களில் ஆட்சியைப் பொறுப்பேற்கவுள்ள கட்சி என்ற ரீதியில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனைக் குறிப்பிடுகின்றோம் என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம்,
அரிசி உற்பத்தியில் தன்னிறைவடைந்துள்ளதாகக் கூறிய அரசாங்கம் தற்போது கீரிசம்பா அரிசியை இறக்குமதி செய்துள்ளது. சந்தையில் பாரிய அரிசி மாபியாக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்மி ஆட்சியில் இந்த அரிசி மாபியாக்கள் ஒழிக்கப்பட்டு விவசாயிகளுக்கு சிறந்த விலையில் தமது நெல்லை விற்பனை செய்யக் கூடிய நிலைமையும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்யக் கூடிய நிலைமையும் உருவாக்கப்படும். எவ்வாறிருப்பினும் புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் நியாயமான அரிசி விலையை அறிவிக்க வேண்டும் என்றார்.

