விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியிருக்கிறார். அவரின் இந்த கருத்து மிகவும் குரூரமானது.
புளித்த ஏப்பம் விடுபவனுக்கு பசி ஏப்பக்காரனின் நிலை புரியாது என்பார்கள். உர்ஜித் பட்டேலின் நிலையும் அதேபோல் தான். உர்ஜித் பட்டேலின் ஊதியம் கடந்த வாரம் தான் ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த அளவு ஊதிய உயர்வு பெறும் உர்ஜித் பட்டேல்களால் ஆண்டுக்கு 3 சதவீதம் கொள்முதல் விலை உயர்வு பெறும் விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள முடியாது. எனவே, உர்ஜித்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்தராமல், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
அடுத்தகட்டமாக, வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலை குறித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; நிலுவையில் உள்ள பாசனத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகள் ஒருபோதும் கடன் தள்ளுபடி கோர மாட்டார்கள். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள். இதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். நாடு முழுவதும் விவசாயத் தொழில் தான் பிரதான தொழிலாக உள்ளது. நாட்டில் விவசாயத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். முதலாளிகளுக்கு கடனில் சலுகை, தள்ளுபடி செய்வதை தவிர்த்து வசூல் செய்ய வேண்டும். இதனை விட்டுவிட்டு விவசாயக் கடனை வசூல் செய்வதில் முனைப்போடு செயல்பட கூடாது. எனவே மத்திய அரசு விவசாயத் தொழிலைக் காப்பாற்றவும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவும், விவசாயத்தை நம்பியிருக்கின்ற தொழிலாளர்கள் நலன் காக்கவும் முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

