வருமான வரித்துறையினர் சோதனை காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பதவியில் உள்ள அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அண்மைக்காலத்தில் இதுவே முதல் முறையாகும். மணல் கொள்ளை உள்ளிட்ட அனைத்து மோசடிகளிலும் சம்பந்தப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோது, சென்னை தலைமைச் செயலகத்தில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது. இப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி, பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இவை தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகம் என்றாலே ஊழல் மாநிலம் என்ற அவப்பெயர் மீண்டும் ஒருமுறை ஏற்பட்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க பினாமி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வரவில்லை. தமிழக அரசு ஊழலை ஊக்குவிப்பதற்கு இதுவே உதாரணமாகும்.
தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் தருவதுதான் அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படை என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காகவே கூடுதலாக ஊழல் செய்யும் அவலம் இப்போது நடைபெற்றிருக்கிறது. ஓட்டுக்குப் பணம் தருவதற்காக ஊழல் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்யவேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

