இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகார்கள் குறித்து தினகரன், மதுசூதனன் ஆகியோர் அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு ‘தொப்பி’ சின்னத்தையும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு ‘மின்கம்பம்’ சின்னத்தையும் ஒதுக்கி, கடந்த மாதம் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. பிளவுபடாத அ.தி.மு.க.வின் சின்னமான ‘இரட்டை இலை’ முடக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆகவே, அதை பயன்படுத்துவதோ, அதே போன்ற தோற்றத்தில் வரைவதோ, வேறு எந்த வகையில் உபயோகிப்பதோ சட்ட விரோதம் ஆகும்.
ஆனால், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி, தனது மின்கம்பம் சின்னத்தை ‘இரட்டை இலை’ போன்று சித்தரித்து சுவரொட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்தி வருவதாக தேர்தல் கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அதுபோல், அ.தி.மு.க. (அம்மா) அணி, தனது இணையதளத்திலும், பத்திரிகையிலும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வருவதாக தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. வேட்புமனு தாக்கலின்போது கூட அதை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த செயல்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், இந்திய தண்டனை சட்டத்தையும் மீறிய செயல்கள் என்பதால், அவற்றுக்கு விளக்கம் கேட்டு, மேற்கண்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அக்கட்சிகள் சார்பில், வேட்பாளர்கள் தினகரன், மதுசூதனன் ஆகியோர் பதில் அனுப்பினர்.

அவற்றை ஆய்வு செய்தோம். அந்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று கருதுகிறோம். ஆகவே, எங்களது அதிருப்தியை இரு கட்சிகளுக்கும் தெரிவித்ததுடன், இனிமேல் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்.
மேலும், இரு கட்சிகளும் தங்களது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து இரட்டை இலை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை இரு கட்சிகளும் 8-ந் தேதி (இன்று) மாலை 4 மணிக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது என்றும், மறுஉத்தரவு வரும்வரை எந்த கட்சியோ, அணியோ, வேட்பாளரோ அல்லது தலைவரோ இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடக்கூடாது என்றும் தேர்தல் கமிஷன் தெளிவுபட தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

