நாணயங்களுக்கு தட்டுப்பாடு இல்லை – மத்திய அரசு

218 0

குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களுக்கு தட்டுப்பாடு இருந்து அவற்றை மக்கள் கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளதா? என்று மக்களவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், ‘ஏதாவது ஒரு இடத்தில் அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாடுகளைத் தவிர நாடெங்கும் நோட்டுக்கள், நாணயங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. பற்றாக்குறைகளை தவிர்க்க கணிசமான அளவில் நோட்டுக்கள், நாணயங்கள் அதிகளவில் அச்சடிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 19 ஆம் தேதிவரை வெவ்வேறு மதிப்புடைய நோட்டுக்கள் 22.6 பில்லியன் எண்ணிக்கையில் புழக்கத்தில் விடப்பட்டன. இவற்றில் ரூ. 10, 20, 50 மற்றும் 100 மதிப்புடைய நோட்டுக்கள் 20.4 பில்லியன்கள் அளவில் புழக்கத்தில் விடப்பட்டன. பெரும் அளவில் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களும் கூட புழக்கத்தில் விடப்பட்டன’ என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.