யாழ். நெடுந்தீவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அத்தோடு, பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் கட்டத் தவறினால் 1 வருட சிறைத் தண்டனையும், சிறுமியின் பெற்றோருக்கு 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடுடாக வழங்குமாறும் தவறினால் 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது தீர்ப்பளித்தார்.
கடந்த 2012 ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டிலிருந்து சந்தைக்கு மீன் வாங்கச் செல்லும் போது கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகச் கட்சியின் உறுப்பினரான கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
பின்னர் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனையும், பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

