ஐ.நா. முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

86 0

04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழின அழிப்பையும், அதற்கான நீதி வேண்டியும், தமிழீழமே எமக்கான தீர்வு என்பதனையும் வலியுறுத்தும் பதாதைகளைத் தாங்கியவாறு உணர்வாளர்களாலும் இளையோராலும் உரிமை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகைப்பேரொளிகளுக்கான ஈகச்சுடரேற்றல், மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம், மலர்வணக்கம் என்பவற்றோடு இளையோர்களின் தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்சு ஆகிய மொழிகளான உரைகளும் உறுதிமொழி வாசிக்கப்பெற்று உறுதியெடுத்தலும் பொங்குதமிழ் பிகடனம் மீள் வலியுறுத்தலும் இடம்பெற்றன.

2009 இல் முள்ளிவாய்க்காலிலே 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இன அழிப்பை எதிர்கொண்ட ஈழத்தமிழினம், 15 ஆண்டுகளாகின்ற போதும் தனக்கான நீதி கிடைக்காமல் போராடி வருகின்ற இவ்வேளை தமிழினத்தைப் போன்று தமக்கான உரிமைக்காகப் போராடும் குர்திஸ் இன மக்களும் தங்கள் தேசியக்கொடியை ஏந்தியவாறு இணைந்துகொண்டு, எமது கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்திருந்தார்கள்.

மாந்த நேயச் செற்பாட்டாளர்கள் கடந்த பெப்ரவரி 15 ஆம் நாள் பிரித்தானியாவில் தொடங்கி ஐரோப்பாவின் பல நாடுகளின் ஊடாகப் பயணித்து நகர சபைகளையும் மாந்த நேய அமைப்புகளையும் சந்தித்து தமிழின அழிப்புக்கான நீதியை வேண்டியும்இ தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்த்தும் ஈருளிப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வதிவிடத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான அதிகாரியுடனும் லவுசான் நகர சபையின் வேற்றின மக்களுக்கான சமூகமயமாக்கல் அதிகாரியுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்தாலும் தமது இனத்தின் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இக்கவனயீர்ப்ப்பு ஒன்றுகூடலில் நம்பிக்கை தருவதாக அமைந்தது.
தமிழினம் சுதந்திரமாக வாழவும் அர்ப்பணிப்புமிக்க தியாகங்களைப் புரிந்த மாவீர்களினதும் மக்களினதும் கனவு நனவாகவும் தமிழீழத்தை மீட்பதே எமக்கான ஒரே தீர்வு’ என்ற உறுதியோடு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன், தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் இக்கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுபெற்றது.
தமிழின அழிப்புக்கு நீதி கேட்கும் அடுத்த கவனயீர்ப்புப் போராட்டம் 16.09.2024 திங்கள் நடைபெறும்.
– சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.