தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!

451 0

ஆதி தமிழன் ஒவ்வொருவரும் போர்க்களம் காணாமல் இறங்கவில்லை. அந்த பரம்பரையில் வழி வந்த ஈழத்தமிழர் வீர தமிழனாக விடுதலைப்புலிகளாக போர்களம் கண்டார்கள். அந்த போராளிகளில் கரும்புலிகள் அற்புதமான மனிதர்கள்.

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கரும்புலிகளின் ஆரம்பம் என்பது 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் தொடங்குகின்றது.

யாழ்ப்பாணம் வடமராட்சியிலே நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினரின் முகாம் மீது வல்லிபுரம் வசந்தன் எனும் இயற்பெயர் கொண்ட கப்டன் மில்லர் அவர்கள் வெடிபொருள் நிரப்பிய பாரவூர்தி கொண்டு மோதினார்.

ஜூலை 5ஆம் திகதி மாலை வேளையில்,   வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட பாரவூர்தியில் ஏறிக்கொண்ட மில்லர், நெல்லியடி மகா வித்தியாலயத்தை நோக்கி நகர்கின்றார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் காத்திருக்கையில் சரியாக இரவு 7மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி மிகப்பெரிய சத்தத்தோடு வெடித்தது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் படுகாயமடைந்துமிருந்தனர்.

அதுவரையான விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது .

அன்று தொடங்கிய கரும்புலி தாக்குதல் பின் பல பரிமாணங்களில் நடத்தப்பட்டது. தரை, கடல் ,வான் என  இறுதிப்போர் வரை கரும்புலிகளின் தியாகங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மறைமுகக் கரும்புலிகளாகவும் செயற்பட்டார்கள்.

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.

பலவீனமான எமது மக்களின் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன்.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள்;. எமது போராட்ட பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள் .என்றார்தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள்.

எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அந்த அற்புதமான தியாகிகளை எமது நெஞ்சில் நிறுத்தி பூசிப்போமாக.