தொழிலாளர்களுக்கு காணி உரிமை: தடையாக இருப்பது யார்?

48 0

தொழிலாளர்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு அரசியல்ரீதியான அழுத்தங்களும் இல்லாமலில்லை. பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு பொதுஜன பெரமுன உட்பட வேறு கட்சிகளும் இதை செயற்படுத்த வேண்டாமென அழுத்தங்கள் வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மகிந்த ராஜபக்சவுடனான கூட்டணியை முறித்து கொண்டமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘உறுமய’ நிரந்தர காணி உரித்து வழங்கும் திட்டம் நாடெங்கினும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடெங்கினும் சென்று காணி உரித்துகளை இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட மக்களிடம் வழங்கி வருகின்றார். ஆனால் அவரது தலைமைத்துவத்தின் கீழ்  அமைச்சரவையில் மூன்று அமைச்சர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்தும் அத்திட்டம் இன்னும் இழுபறியாகவே உள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைத்தாலும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் திட்டம் உடனடியாக அமுல்படுத்த முடியாதிருந்தமைக்குக் காரணம் அது குறித்த ஒரு கொள்கை திட்ட ஆவணத்தை தயார்ப்படுத்த காலம் எடுத்துக்கொண்டமையாகும். தற்போது குறித்த ஆவணம் தயார்ப்படுத்தப்பட்டு விட்டாலும்  கம்பனிகளும் சில அரசியல் கட்சிகளும் இத்திட்டத்துக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதால் தொடர்ந்தும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட ஒன்றாகவே உள்ளது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி வழங்கும் முகமாக அதற்கான அனுமதியை பெறுவதற்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், காணி அமைச்சர்  ஹரீன் பெர்ணான்டோ , பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக அப்போது விளங்கிய ரமேஷ் பத்திரன ஆகியோர் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தனர். இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றாலும் இது தொடர்பான கொள்கை ஆவணம் ஒன்றை தயாரிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளின் அளவு,  தற்போது உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் காணி உரித்துக்கு ஒதுக்கப்படும் காணிகளின் ஹெக்டெயர் அளவு உட்பட ஏனைய இது தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக இந்த கொள்கை ஆவணம் தயாரிக்கப்பட்டது. தோட்டக்காணிகள் அரசாங்கம் வசம் இருந்தாலும் கம்பனிகளுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் கம்பனிகளின் அனுமதியும் இதற்கு தேவைப்பட்டது. விசேட  அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்திய வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒரு அமைச்சரவை பத்திரத்தின் அனுமதியைப் பெற்று அதற்கு தலையசைத்த கம்பனிகள், தொழிலாளர்களுக்கு நிரந்தர காணி உரிமையை தருவதற்கு தமது எதிர்ப்பையே காட்டி நிற்கின்றன. இப்போது தேயிலைத் தொழிற்றுறையை முன்னெடுத்துச்செல்லவே தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தாம் காணிகளை நிரந்தரமாக தொழிலாளர்களுக்கு வழங்குமிடத்து அவர்கள் முற்றாக வெளியேறி விடுவர் என்று தமது பக்க நியாயத்தை கூறினர்.

அதே வேளை தொழிலாளர்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு அரசியல்ரீதியான அழுத்தங்களும் இல்லாமலில்லை. பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு பொதுஜன பெரமுன உட்பட வேறு கட்சிகளும் இதை செயற்படுத்த வேண்டாமென அழுத்தங்கள் வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மகிந்த ராஜபக்சவுடனான கூட்டணியை முறித்து கொண்டமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மகிந்தவின் ஆட்சி காலத்தில் அவர் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு தான் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லையென்பதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். சில தோட்டங்களுக்கு கொங்றீட் பாதைகளை அமைத்துக்கொடுத்ததோடு அவரது பணி முடிவடைந்தது. அவரது அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சராக விளங்கிய அமரர் ஆறுமுகன் தொண்டமானும் தொழிலாளர்களின் காணி உரிமை தொடர்பில் வாய் திறக்கவில்லை. ஆனால் ஆறுமுகன் அமைச்சராக இருந்த காலத்திலேயே அவருக்குத்தெரியாமல் மகிந்த பெருந்தோட்டப்பகுதி காணிகளை அளவீடு செய்தார் என்பது முக்கிய விடயம்.

இப்போது ஒரு சிக்கலான காலகட்டத்தில் தொழிலாளர்களின் காணி உரிமைகள் பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர். தனது வேலை முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுமய திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோருக்கு காணி உரித்துகளை வழங்கிக்கொண்டிருக்கின்றார். உறுமய திட்டத்துக்கு இரவு பகல் பாராது உழைக்கும் அதிகாரிகள், பெருந்தோட்டத் தொழிலாளர் காணி விவகாரத்தை எட்டியும் பார்ப்பதில்லை. மேலும் பிரதமராக விளங்கும் தினேஜ் குணவர்தன முடிவுகளை எடுப்பதில் பலகீனமான ஒருவராகவே இருக்கின்றார். எனவே இந்த காணி உரித்து விவகாரத்தில் பல பக்கங்களிலுமிருந்தும் தனக்கு வரும் அழுத்தங்களை அவரால் சமாளிக்க முடியவில்லை.

இதன் காரணமாக அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவ்விடயத்தில் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தவித்து வருகின்றது. முன்னதாக இ.தொ.கா வழங்கிய செளமிய பூமி காணி உரித்து வாக்குறுதியும் இதன் காரணமாக நிறைவேற்றப்படவில்லை.  தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு யார் எதிராக இருக்கின்றார்கள் என்பதை இ.தொ.கா நன்கறியும். ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் பக்கமிருந்து கொண்டு அமைச்சுப்பதவியை பெற்றிருக்கின்றனர். அமைச்சுப்பதவிக்கான சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். அதை அவ்வளவு இலகுவில் விட்டு விட முடியாது. அரசாங்கத்தின் பக்கமிருந்து வெளியேறவும் முடியாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்கும் முடிவோடு தான் இ.தொ.கா உள்ளது.

ரணிலிடமிருந்து வெளியேறினால் இ.தொ.கா தனிமைப் பட்டு விடும். அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு வேறு எந்த கட்சிகளும் இல்லை. அரசியலில் வங்குரோத்து நிலைமையை அடைந்து விட்ட மகிந்த தரப்புக்கும் இனி செல்ல முடியாது. அது தற்கொலைக்கு சமன். ஆகவே வேறு வழியின்றி இ.தொ.கா தற்போதைய அரசாங்கத்தின் பக்கமே இருக்க வேண்டிய நிர்பந்தம். ஆனால் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பின்னர் மலைய சமூகத்துக்கு இ.தொ.கா வழங்கிய எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லையென்பதை ஞாபகம் கொள்ளல் அவசியம்.  காணி உரிமை, மலையக பல்கலைக்கழகம் உட்பட தொழிலாளர்களின் வேதனத்துக்கு நிரந்தர தீர்வு போன்ற விடயங்கள் கிடப்பில் போடப்பட்டதாகவே உள்ளன. அவற்றை நிறைவேற்றித் தருவதாக ஆறுதல் வசனங்களை மாத்திரமே ஜனாதிபதி கூறி வருகின்றார்.

இந்திய அரசாங்கத்தின் பத்தாயிரம் வீட்டுத்திட்டங்களும் தாமதமடைந்துள்ளன. இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்துக்குள்  முதல் தொகுதி வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படும் என கூறப்பட்ட போதும் 1075 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வோடு அத்திட்டம் இன்னும் துரிதப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற மூன்று மாதங்கள் வரையான காலப்பகுதி உள்ளது. அதற்கு முன்பதாக எதை வைத்துக்கொண்டு இ.தொ.கா,   ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கேட்டு மக்கள் முன்பு சென்று நிற்கப்போகின்றது என்பது தெரியவில்லை. அரசாங்கத்தின் பக்கமிருந்து கொண்டே மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை. மறுபக்கம் ஜனாதிபதி ரணிலுக்கு எந்தளவுக்கு அழுத்தங்கள் உள்ளனவோ அதேயளவு அழுத்தம் அவருக்கு ஆதரவு வழங்கும் ஏனைய கட்சிகளுக்கும்   உள்ளது  என்பதை இந்த காணி விவகாரத்தின் மூலம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

சி.சி.என்