சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!

78 0

பதின்மூன்றாம் திருத்தம் ஒப்பமிடப்பட்டபோது அதனை ஆதரித்த ரணில் இப்போது காவற்துறை அதிகாரம் கிடையாது என்கிறார். பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த அன்றைய பிரதமர் பிரேமதாசவின் மகன் சஜித் முழு அதிகாரங்களையும் தருவேன் என்கிறார். ஒப்பந்தத்தை அன்று எதிர்த்து இனவெறியாட்டம் புரிந்த ஜே.வி.வி.யின் வேட்பாளர் அநுர புதிய அரசியல் அமைப்பே தீர்வு தரும் என்கிறார். யாரைத்தான் நம்புவது?

இவ்வருடம் இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இதற்கு முன்னையவற்றைவிட வேறுபட்டதாகவும், ஒருவகையில் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாகவும் நோக்கப்படுகிறது.

தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனுக்கள் தாக்கல்  செய்யும் திகதியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், தேர்தல் களத்தில் சூடு ஆரம்பித்துள்ளது.

பிரதான வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசநாயக்க ஆகியோர் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். மகிந்தவின் பொதுஜன பெரமுன போட்டியிடுவதுபற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் கடந்த ஒரு மாதத்துக்குள் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு முதலாம் கட்ட பரப்புரையை முடித்துள்ளனர். இதனால் வடக்கில் அரசியல் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி என்ற பதவி வழியாக அரசின் சில நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவு செய்பவர் என்ற போர்வையில் ரணில் தமது பயணத்தை மேற்கொண்டார். அவ்வேளை சில பொறிகளையும் புதைத்துவிட்டுச் சென்றார். அரசியல் தீர்வா, அபிவிருத்தியா இன்றைய தேவை என்ற கேள்வியை எழுப்பி தாமே பதிலையும் கூறினார். நாற்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பொருளாதார நன்மைகளையே வேண்டுவதாகவும் அரசியல் நன்மைகளை கேட்கவில்லை என்றும் இவர் கூறியது தமிழரின் அரசியல் தீர்வுக் கோரிக்கையை திசை திருப்பும் இலக்குக் கொண்டது.

பாடசாலைகளில் திறன் வகுப்புகளை உருவாக்குவதற்கான தமது அன்பளிப்புகளை எடுத்துச் சென்று விநியோகித்த சஜித் பிரேமதாச அவை தமது சொந்த நிதியிலானது என்று தெரிவித்தது முக்கியமானது. இவரது தந்தையார் ரணசிங்க பிரேமதாச மாவட்டங்கள் தோறும் மாதிரிக் கிராமங்களை நிர்மாணித்தார். மகன் சஜித் முன்மாதிரி பாடசாலைகளை உருவாக்கி தமிழர்களின் அரசியல் தீர்வை இரண்டாம் மட்டத்துக்கு கொண்டுசெல்ல முனைந்துள்ளார்.

ஜே.வி.பி. என அறிமுகமான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசநாயக்க வடக்கு விஜயத்தின்போது அரசியல் மட்டுமே பேசினார். பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறையிலுள்ளவாறு செயற்படுத்துவேன் என்று கூறியிருந்தாலும் புதிய அரசியல் அமைப்பின் மூலமே இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமென தங்கள் நிலைப்பாட்டை சென்ற இடமெங்கும் வெளிப்படுத்தினார்.

1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், ராஜிவ் காந்தியும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் உருவான 13வது திருத்தம் – மாகாண சபை முறைமைகள் பற்றியே இவர்கள் மூவரும் கவனம் செலுத்தினர் என்பதை காணக்கூடியதாக இருந்தது. தமிழர் தரப்பு கேட்டு வரும் சமஷ்டி முறை நிர்வாகம் பற்றி எதுவும் கூறாது இயலுமானவரை தவிர்த்துக் கொண்டனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசில் அமைச்சராகவிருந்து முழுமையாக ஆதரவு வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க. தமது பெரிய தந்தையார் முறையான ஜே.ஆரின் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டவர் இவர். பதின்மூன்றாம் திருத்தத்திலுள்ள காவற்துறை அதிகாரத்தை தர முடியாதென்றும் காணி நிர்வாகத்தை மட்டுமே மாகாண சபைக்கு வழங்க முடியுமென்றும் இப்போது கூறுகிறார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது அதனை முழுமையாக நிராகரித்து, ராஜிவ் காந்தியை சந்திக்கவே மறுத்த அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவே 1990ல் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபையை கலைத்த பெருமைக்குரியவர். இவரது மகனான சஜித் பிரேமதாச காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபையை மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து தம்மால் வழங்க முடியுமென்று தமிழ் தலைவர்களிடம் உறுதி கூறியுள்ளார்.

1987 ஒப்பந்த வேளையில் ஜே.வி.பி. என்ன செய்தது என்று சொல்லத் தேவையில்லை. தெற்கில் இரத்த ஆறு ஓடவைத்து தமிழரின் வணிக நிலையங்களை எரித்தும் கொள்ளையடித்தும் படுகொலைகளையும் புரிந்தவர்கள் இவர்கள். மாகாண சபை முறைமையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதால் தங்கள் கட்சியும் அதனை ஏற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், புதிய அரசியலமைப்பின் மூலமே அரசியல் தீர்வு காண முடியுமென்பது இவர்களது நிலைப்பாடு.

மொத்தத்தில் இவர்கள் மூவரும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவதில்கூட நிலையான முடிவை இவர்களால் கூற முடியவில்லை. ஏதோ பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்திவிட்டால்(?) தமிழரை ஏமாற்றிவிடலாமென எண்ணுகிறார்கள் போல் தெரிகிறது.

நல்லாட்சிக் காலத்தில் வடக்கில் ஆயிரம் விகாரைகள் அமைப்பேன் என்று பகிரங்கமாகக் கூறியவர் சஜித் பிரேமதாச. வெடுக்குநாறிமலை போன்ற தமிழரின் வழிபாட்டுத் தலங்களை சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம் தடை செய்து நிர்மூலமாக்கியபோது அமைதி காத்தவர் இவர். மாகாண சபைகளுக்கு கருமாதி செய்தவர் இவரது தந்தை. ஆனால் இவர் மாகாண சபைகளுக்கு முழு அதிகாரங்களையும் தரப்போவதாகச் சொல்கிறார்.

சஜித் பிரேமதாச இவ்வாறு உறுதி வழங்குவதற்கான வஞ்சக வலையை விரித்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின்போது தம்மைச் சந்தித்த தமிழ் தலைவர்களிடம், காவற்துறை அதிகாரத்தையும் தருவதாக சஜித் தெரிவித்தாரா என்பதை அவரிடமே நேரடியாகக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் என முடிச்சுப் போட்டவர் ரணில்தான். தேர்தலில் வாக்குகளைப் பெறும் நோக்குடன் சகல அதிகாரங்களையும் தரப்போவதாக கூறிய சஜித்துக்கு அவரது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுதான் ரணில் எதிர்பார்த்தது.

சஜித் கூறிய காவற்துறை என்பது சமூக பொலிஸ், சுற்றாடல் பொலிஸ் என்று விளக்கம் கொடுத்துள்ளார் அவரது கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.மரிக்கார். சஜித்தின் கூற்றுத் தொடர்பாக வட்ட மேசை மாநாடு வேண்டுமென கோரியுள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய. பொதுஜன பெரமுனவின் றோகித அபேகுணவர்த்தனவும், இனவாதத்தின் அடையாளமாக விளங்கும் உதய கம்மன்பிலவும் சஜித்தின் கருத்தை வன்மையாக எதிர்த்துள்ளனர். சஜித்துக்கு எதிராக அவரது அலுவலகத்தின் முன்னால் எதிர்ப்புப் பேரணி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ரணில் போட்ட விதை சஜித்தின் வளவுக்குள் நன்றாக வளரும்போல் தெரிகிறது.

சஜித் வடக்கில் வழங்கிய உறுதிமொழியில் – மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து – என்று கூறியதற்கும், அநுர குமார திசநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்தில் – தற்போது நடைமுறையிலுள்ளவாறு – மாகாண சபைகளை செயற்படுத்துவேன் என்று கூறியதற்கும் என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொண்டால் யாரும் மண்டையை உடைக்க வேண்டிய தேவையில்லை.

மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து என்பது சிங்கள மக்களின் சம்மதத்தைப் பெற்று என்பதாகும். தற்போது நடைமுறையிலுள்ள என்று அநுர குமார தெரிவித்தது வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபை முறைமையை என்பதாகும். ஆக, இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு எதையும் மேன்மையானதாகக் கொடுப்பதாக எதுவும் தெரிவிக்கவில்லை.

சிங்களத் தலைவர்களின் அரசியல்போக்கு தொடர்ந்து சுத்துமாத்தாக இருக்க தமிழர் தரப்பினரின் பம்மாத்துகள் அதற்கு இணையாக அரங்கேறுகின்றன. ஈழவர் அரசியலில் தனிஒட்டகமாக கூடாரத்துள் நுழைந்தவரின் செயல்கள் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டை நிர்மூலமாக்கி தமிழ் தேசியத்தை துடைத்தழிக்கிறது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னரே தமிழரசு கட்சி தனது முடிவை எடுக்குமென அதிகாரபூர்வமாக அதன் தலைமை அறிவித்திருக்கையில், இவர் ஒருவர் மட்டும் தமிழர் தரப்பின் பொதுவேட்பாளரை தோற்கடித்தே தீருவேன் என வீரசபதம் எடுத்து சூளுரைத்துள்ளார். ஏற்க முடியாத இவரது செயற்பாடுகளால் இவரை இடைத்தரகர் என்று இப்போது பலரும் அழைக்க ஆரம்பித்துள்ளனர். பொதுவாழ்வில் இவ்வாறானவர்களை மாமாக்கள் என்று அழைப்பதுண்டு.

பொதுவேட்பாளர் தொடர்பாகவும் இடைத்தரகர் தொடர்பாகவும் திபாகரன் என்னும் அரசியல் கட்டுரையாளர் அண்மையில் எழுதி தமிழ் இணையம் ஒன்றில் வெளியான நீண்ட கட்டுரையின் இரு பந்திகள் கீழே:

‘தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களை ஜனநாயக ரீதியில் வலுவற்றவர்களாக தோற்கடிப்பது, சிங்களத் தலைவர்களின் வெற்றியை மலினப்படுத்துவது, சிங்களத் தலைவர்களின் வெற்றியை சவாலுக்கு உட்படுத்துவது அல்லது அர்த்தமற்றதாக்குவது ஆகியவற்றை செய்துகாட்ட முடியும். இவ்வாறு ஒரு தமிழ் பொதுவேட்பாளரின் மூலம் பெறக்கூடிய நன்மைக்கு எதிராக பொதுவேட்பாளரை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, யாரெல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கவில்லையோ அவர்கள் யார்? உண்மையில் அவர்கள் சிங்கள தேசத்தின் சேவகர்கள், சிங்களத்தின் கையாட்கள், தமிழ் தேசியத்தின் மீது சிங்கள தேசத்தால் செருகப்பட்ட ஆப்புகள்தான் இவர்கள் என்பதையும் இனங்காட்டி தமிழ் மக்களிடையே ஊடுருவி இருக்கின்ற இந்தப் புல்லுருவிகளையும், வேடதாரிகளையும் துரத்தி அடிக்க முடியும்.

தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதில் சிக்கலை உருவாக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொதுவேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்கை ஒன்று குவித்து பலப்படுத்துவோம். தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்துவோம். தமிழ் தேசியத்தை பலப்படுத்துவோம்”.

இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

பனங்காட்டான்