திருக்கோணேஸ்வரர் ஆலய இடைக்கால நிர்வாக சபை- நீதிமன்றத்தின் உத்தரவு

40 0

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தின் இடைக்கால நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபையை நிறுவுவதற்காக சம்பந்தப்பட்டவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு நீதிமன்றால் இன்று (28) பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் 21.02.2024 அன்று தொடரப்பட்ட வழக்கானது இன்றைய தினம் (28) நகர்த்தல் பத்திரத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது  இடைக்கால நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபையை நிறுவுவதற்காக சம்பந்தப்பட்டவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கான அறிவித்தலை பதிவாளர் மூலமாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி சண்முகம் தில்லைராசன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமரநாதன் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்றம் இடைக்கால நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபையை நிறுவுவதற்காக சம்பந்தப்பட்டவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால நிர்வாக சபைக்காக பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், சட்டத்தரணி தி.கேசவராஜன், Dr. சுரேஷன் கந்தவேல், மு.ஆனந்தராசா, ஆ.சாந்தகுமார், ந.குமணன், சு.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் இடைக்கால ஆலோசனை உறுப்பினர்களாக நகரசபை செயலாளர் வெ.ராஜசேகர், மா.இராசரெட்ணம், து.தவசிலிங்கம், இ.புவனேந்திரன், ஐ.குகனேசன் ஆகியோருக்கும் இடைக்கால கட்டளையின் பிரகாரம் பாரமெடுப்பதற்கான சம்மதத்தினை தெரிவிக்குமாறு தொலைபேசி வாயிலாகவும், தபால் மூலமாகவும், பிஸ்கால் மூலமாகவும் அறிவித்தலானது நீதிமன்ற பதிவாளர் மூலமாக அனுப்புவதற்கு இன்று (28) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி நிகழ்வு மற்றும் நகர்வலத்தின் பின்னர் இடைக்கால நிர்வாக சபையினை நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.