வடமாகாணத்தில் உள்ள ஆயிரத்து 252 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபை பேரவை செயலகத்தில் நடைபெற்றபோதே அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி சபையில் பேசபட்டதற்கமைய, 18 ஆம் திகதி ஆளுநருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு 180 வெற்றிடங்கள், சுகாதார அமைச்சில் 22 வெற்றிடங்கள், முதலமைச்சரின் அமைச்சில் 15 வெற்றிடங்கள், கல்வி அமைச்சில் ஆயிரத்து 51 வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இதற்கமைய, மொத்தமாக ஆயிரத்து 252 வெற்றிடங்கள் நிலவுகின்றன.
குறித்த வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரிடம் கேட்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

