எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள்

28 0

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் அதிமுகவில் 21-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

கடந்த 2 நாட்களில் கட்சியில் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர். தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரம், பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரம் என விருப்ப மனுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்றும் விருப்ப மனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அதன் மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையிலான நிர்வாகிகள் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பொதுச்செயலாளர் பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்களை பெற்றனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ராஜ் சத்யன், யார் என்ன சொன்னாலும், அதிமுக ஒன்றுதான் வெற்றி பெற முடியும் என்பதுதான் கள எதார்த்தம். மாநில உரிமைகள் எதை பற்றியும் தேசிய கட்சிகள் எதுவும் கவலைப்படவில்லை. மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று, தேசிய தலைமையை தீர்மானிக்கும் சக்தியாக பலம் பெறுவோம் என்றார்.

இவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் விருப்ப மனுக்களை நேற்று பெற்றுச்சென்றனர். வரும் மார்ச் 1-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற உள்ளது.