அதிமுகவுடன் பாமக, தேசிய லீக் பேச்சு

20 0

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதாக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே பாமக நிறுவனர் ராமதாஸை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரத்தில் சந்தித்து பேசினார். ஆனால் பாமகவின் முடிவை இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை இந்திய தேசிய லீக் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான், பொதுச்செயலாளர் அகமது தேவர்கோவில், மகளிரணி தலைவி தஸ்லிம் இப்ராஹிம் சுலைமான், மாநிலத் தலைவர் முனிருதீன் ஷெரிப் ஆகியோர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளனர்.

பின்னர் முனிருதின் ஷெரிப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு மக்களவை தேர்தலில் ஆதரவு அளிப்பது, தொகுதிகள் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதிமுக அமைத்துள்ள குழுவிடம் பேசி முடிவெடுக்குமாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெறும் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில், தொகுதி எண்ணிக்கை தொடர்பாக முடிவெடுத்த பின்னர் அதிமுக குழுவை சந்திப்போம். 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில்தான் இருந்தோம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் விலகினோம். பின்னர் சிறுபான்மையினருக்கு நல்லது செய்வார்கள் என திமுகவுடன் இருந்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு நன்மை கிடைக்கவில்லை. அதனால் அதிமுகவுடன் எங்கள் தொடர்பை புதுப்பித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.