தேர்தலை எப்படி நிறுத்தலாம் என யோசிக்கின்றது அரசு: டலஸ்

48 0

ரணில் அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. எப்படித் தேர்தலை நிறுத்தலாம் என்று ரணில் அரசு யோசிக்கின்றது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், “எந்தத் தேர்தல் முதலில் நடக்கும்? ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா?” என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “எந்தத் தேர்தலையும் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்கு விருப்பம் இல்லை.

இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு தேர்தல்களை ஒத்திப்போட்டுள்ளது. வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலை 6 வருடங்களுக்கு ஒத்திப்போட்டது இந்த ஐக்கிய தேசிய கட்சி.

தேர்தல் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது. வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து கள்ள வாக்குகளைப் போட்டுத் தங்களுக்குத் தேவையான முடிவைப் பெற்றுக்கொண்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசு.

அதனூடாக நாடாளுமன்றத் தேர்தலை 6 வருடங்களுக்கு ஒத்திப்போட்டது. அப்படிப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இப்போது ஜனாதிபதியாகி இரண்டு தேர்தல்களை (உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்) ஒத்திப்போட்டுள்ளார்.

இதனால், ரணில் விருப்பத்தோடு தேர்தலை நடத்துவார் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அவர் தேர்தலை நடத்தும் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை.

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதம் இருக்கும்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசமைப்பு சொல்கின்றது என தெரிவித்துள்ளார்.