தமிழருக்கான அரசியலுக்கான தீர்வு : ஜனாதிபதியின் போலி வாக்குறுதிகள் இனியும் வெற்றி பெறாது

52 0

தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக  குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடுகளை மாத்திரம் ஜனாதிபதி மேற்கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு’ தமிழருக்கு அரசியல் தீர்வு என்று குறிப்பிடுகிறார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு  இந்த ஆண்டு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்காவிடின்  அரசாங்கம் தோல்வி அடைவது உறுதி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில்  பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம்,நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக புதிய சட்டங்களை கொண்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த ஆண்டு மாத்திரம் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்சாலைகள்  மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சுமார் 11 ஆயிரம் கைத்தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ உட்பட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ஆகியோரை  பொருளாதார படுகொலையாளிகள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு செய்தியாக மாத்திரமே காணப்படுகிறதே தவிர  அந்த தீர்ப்பை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை யார் செய்தது,எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என சனல் -4 தொலைக்காட்சியில் பல விடயங்கள் வெளியாகின. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை,தேசிய மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவை நியமித்தார். அத்துடன் அவ்விவகாரம் மூடி மறைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பேசப்பட்ட விடயங்கள்,மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம், யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என்பதில் மாத்திரம் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் தீர்வு வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் நலன் கருதி சட்டமூலங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக  உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்பதொன்றை உருவாக்குவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த செயற்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்க்கிறார்கள்.

அரசியல் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு முன்னேற்றகரமான  நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ‘தமிழரின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு ‘என்று தற்போது குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து. தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதில் மாத்திரம் அவதானம் செலுத்தப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில்  கிழக்கு மாகாணத்தில் குச்சவெளி பகுதியில் உள்ள நான்கு விகாரைகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்குள் பௌத்த விகாரையை நிர்மாணிப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களோ,சிங்களவர்கள் வாழாத பகுதிகளில் கூட பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் அந்த உத்தரவுகளை செயற்படுத்த முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார்.

தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு காண்பதற்கு அரசியலமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எமக்கான அரசியல் அதிகாரத்தை வழங்காமல் ஆட்சிக்கு வருவதற்கு கூறும் பொய்கள் இந்த முறை வெற்றி பெறாது என்பதை அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.