ஆர்.கே.நகரில் பண வினியோகத்தை தடுத்து நிறுத்துங்கள்: தேர்தல் கமிஷனரிடம் தி.மு.க. வலியுறுத்தல்

240 0

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யும் அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் தடுத்து நிறுத்துங்கள் என்று இந்திய தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியிடம் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டெல்லியில் இந்திய தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை நேற்று சந்தித்து, ஆர்.கே.நகர் தொகுதி சம்பந்தமாக புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். அவர்களை கையும் களவுமாக தி.மு.க. தொண்டர்கள் பிடித்து போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர், பறக்கும் படையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். இது தொடர்பாக புகார் மனுவும் அளிக்கப்பட்டது.

சில பகுதிகளில் ஓட்டுக்கு சிலர் பணம் கொடுத்து கொண்டிருந்த நேரத்தில், கண்காணிப்பாளரும், பறக்கும் படையினரும் நேரில் சென்றபோதும், பணம் கொடுத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் தேர்தல் தொடர்பான சட்டவிரோதமானச் செயல்களில் ஈடுபடுவதற்காக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், துறைமுகம், திருவொற்றியூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய தொகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் உடனடியாக சோதனை நடத்தி, ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், உதயக்குமார், வெற்றிவேல் எம்.எல்.ஏ. போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் வைத்து காமாட்சி விளக்கு, சேலை, குத்து விளக்கு போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) நிர்வாகிகளும் 40-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள்.


கடந்த 2 நாட்களில் மட்டும் பணப்பட்டுவாடா குறித்து 20-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்தவர்களிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோத சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தடுத்த தி.மு.க. நிர்வாகிகளை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் காயமடைந்த பார்த்தசாரதி, ஷேக், அப்பாஸ் ஆகிய மூன்று தி.மு.க. தொண்டர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயகம் கேலிக்கூத்தாக ஆகிவிடும். எனவே, அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) ஆகிய இரண்டு அணியினரும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.