வவுனியாவில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் போராட்டத்தில்..(காணொளி)

329 0

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் ஒருவர், தனது பிள்ளையுடன் வவுனியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து, தமது காணியை

ஒப்படைக்குமாறு கோரி மருந்துப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டத்தில்,

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று, நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்தது.

அதன்பின் அவர்களது காணியில் உள்ள வீட்டில், ஒரு குடும்பம் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்கியிருந்தது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடைய காணியில் தங்கியிருந்த கிளிநொச்சி குடும்பத்தினரால், பிறிதொரு வீடும் கட்டப்பட்டுள்ளது.

தற்போது அக் குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வரும் நிலையில் தமது உறவினர் எனக் கூறி வேறொரு குடும்பத்தினரை குறித்த காணியில் குடியேற்றியுள்ளனர்.

இந்நிலையில் இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும், அவரது மகனும் கடந்த 23ஆம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றபோது, காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி காணியையும், வீட்டையும் கொடுக்க மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வந்தவர்கள் குறித்த காணி தம்முடையது என்பதற்கான ஆதாரங்கள் 1976ஆம் ஆண்டு முதல் உள்ளது எனக் கூறியும், இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்குச் சென்றும் தமக்கான நீதி கிடைக்கவில்லையென தெரிவித்தும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணி தமக்கு வேண்டும் என்றும், அவ்வாறு காணி கிடைக்காவிட்டால் இவ்விடத்திலேயே மருத்து குடித்து உயிர் மாய்ப்போம்; எனத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படும் தாயாரும், அவரது மகனும் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதன்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோர், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா ஆகியோர், குறித்த காணி ஏன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட தாயையும், அவரது மகனையும் அழைத்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவரை குறித்த காணிக்கு அனுப்பி அதன் உண்மை நிலை தொடர்பாக அறியத்தரும்படி மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருந்தார்.

ஒரு வார காலத்திற்குள் இதற்கு சரியான முடிவு வழங்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரியால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.

 

இதேவேளை, நேற்று இரவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் தனது காணியின் முன்பாக மருத்துப் போத்தலுடன் போராடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அக்காணிக்கு அயலில் உள்ள மக்களும் அவ்விடத்திற்கு வந்து தாம் இங்கு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே இருந்ததாகவும், அது அவர்களது காணி எனவும் தெரிவித்து ஆதரவு வழங்கியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மருந்துப் போத்தலை மீட்டதுடன் போராட்டத்தை சமரசமாக தீர்த்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.