இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு கூருவதுடன் மனிதன் பாவத்திலிருந்து விடுதலை பெற்று மனந்திரும்பி வாழ்வதை தவக்காலம் உணர்த்துகிறது. விபூதிப் புதனுடன் ஆரம்பமாகும்.
தவக்காலத்தின் முதல் நாளான இன்றைய தினத்தில் கத்தோலிக்கர்கள் அனைவரும் தேவாலயம் சென்று திருப்பலியில் கலந்துகொள்வது கட்டாய மாகும். கத்தோலிக்கத் திருச்சபையில் இன்றைய தினத்தில் குருவானவர் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைந்து மரணத்தை நினைவுபடுத்துகிறார்.
தவக்காலத்தின் முதல் நாள் விபூதிப் புதன், திருநீற்றுப் புதன், சாம்பல் புதன் என்றெல்லாம் அழைக்கப்படுவதுண்டு. தவக்காலமானது நாற்பது நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.
மன மாற்றத்தின் காலமாகிய தவக்காலத்தில், நாம் அறிந்தும் அறியாமலும் செய்த நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை கடவுளின் வழியில் கொண்டு செல்வதற்காகவே இந்தப் புனிதமான தவக்காலம் நமக்குத் தரப்பட்டுள்ளது.
தவக்காலத்தின் 40 நாட்களில் கத்தோலிக்கர்கள் செபம், தவம், ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவது கட்டாயமாகும். மேலும், உண்ணா நோன்பு இருப்பதும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் சுத்த போசன நாட்களில் சுத்த போசனம் அனுசரிப்பதும் கட்டாயம் எனக் கூறப்படுகிறது.
நாற்பது என்பது விவிலியத்தில் மிக முக்கியமான எண். விடுதலைப் பயண நூலின் கதாநாயகன் மோயீசன் இஸ்ராயேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வரும் வழியில், சீனாய் மலையில் மோயீசன் கடவுளோடு இருந்தது நாற்பது இரவும், நாற்பது பகலும் ஆகும். வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டை நோக்கிய பயணத்தில் அவர்கள் பாலை நிலத்திலே அலைந்து திரிந்த ஆண்டுகள் 40 ஆகும். அதேபோல், நோவாவின் காலத்தில் மழை பொழிந்தது நாற்பது இரவும், நாற்பது பகலும் ஆகும்.
இவை அனைத்துக்கும் மேலாக, பூமியில் உள்ள மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனித அவதாரம் எடுத்த இறைமகன் இயேசு, பாலைவனத்தில் உண்ணா நோன்பு இருந்தது 40 நாட்கள் ஆகும். இதனை அனுஷ்டிக்கும் முகமாக, மனிதர்கள் தங்களின் பாவங்களை நினைத்து அதிலிருந்து மீண்டு, நல்வழிக்குத் திரும்பவும் இந்தத் தவக்காலம் தரப்பட்டுள்ளது. தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளைக் கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
இது இயேசுவுக்காக அழும் காலமல்ல, மாறாக நமது பாவங்களை அறிந்து, உணர்ந்து மனம் வருந்தி மனம் திருந்தும் காலம்.மனம் திரும்புதலே தவக்காலத்தின் அடிப்படை. அதற்கு முதலில் எதிலிருந்து மனதைத் திருப்ப வேண்டும் எனும் புரிதல் அவசியம். மிக முக்கியமாக பாவத்திலிருந்து நாம் திரும்ப வேண்டும். இந்தக் காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழை, எளியவர்களுக்கு வழங்குவதை பலரும் கடைப்பிடிக்கின்றனர். சிலர் வெள்ளிக் கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதனை “உன் வலது கை செய்வதை உனது இடது கை அறியாதிருக்கட்டும்” என கடவுள் கூறுகிறார். நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வேண்டுமென்பதையே இறைவன் விரும்புகிறார்.
இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே ‘சாம்பல் புதன்’ நினைவூட்டுகிறது
நமது பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து தனது உயிரை விட்டார். நாமோ தொடர்ந்து பாவம் செய்கிறோம், தண்டனைக்கான நியாயத் தீர்ப்பு நாளை நாம் மறந்தே போய் விடுகிறோம். அதை நினைவில் கொள்வதற்கான அழைப்பாக நாம் இந்தத் தவக்காலத்தை மனதில் கொண்டு மனம் திரும்பி கடவுளின் பிள்ளைகளாக வாழ இந்தப் புனித தவக்காலம் நமக்கு வலியுறுத்துகிறது.
–ரெஜினா மதிவதனி ஜோர்ஜ்–
படப்பிடிப்பு : ஜே. சுஜீவ குமார்





