உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய 5 விடயங்கள் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திலில்லை!

48 0

நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த முப்பதுக்கும் மேற்பட்ட விடயங்களில் ஐந்து விடயங்கள் உள்ளடக்கப்படாமையை சுட்டிக்காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் எல்.டி.பி.தெஹிதெனியவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி ரணில் வி;க்கிரமசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 13,16,19,20,27 ஆகிய ஐந்து பிரிவுகளில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்கள் முழுமையாகவும், பகுதியாகவும் உள்ளவாங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,  நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் சான்றுரைக்கப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் உள்ளடக்கங்கள் இடம்பெறாது தவறுகள் இழைக்கப்பட்டதையிட்டு ஆழ்ந்த கவலைகளையும், கரிசனைகளையும் கொள்வதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் விடயங்கள் உள்ளீர்க்கப்படாது சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பில் கவலைக்குரிய நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்ளடக்கப்படாது நிறைவேற்றப்படுவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையுடனேயே அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது. ஆனால் அந்த விடயங்களை உள்ளடக்கிய சட்டமூலம் சதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமையை சாதாரணமாக கொள்ள முடியாது.

ஆகவே, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளைக் உள்ளடக்காது காணப்படுமாயின் தற்போதைய சட்டம் தனது வடிவதத்தில் உயர்நீதிமன்றத்துடன் இணங்குகின்றமைக்கான தேவையான அங்கீகாரத்தினைப் பெற்றதா என்பது தொடர்பில் தீவிரமான கவலைகள் ஏற்படுத்தப்படலாம். ஆகவே பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் அச்சட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.