களுத்துறை தாக்குதல்: மற்றுமொருவர் கைது

328 0

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்ற பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, ரத்மலானை பகுதியில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் சமயங் உள்ளிட்ட முக்கிய சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் மீது, களுத்துறை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில், சமயங் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட ஏழ்வர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக சிலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாத்தறை – கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான, போதலே எனப்படும் சமித் சானக என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பாதுகாப்பாக பதுங்கியிருக்க இடமளித்தமை மற்றும் கொலைக்கு உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபர் வசம் இருந்து குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவரை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப் பிரிவினர் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.