தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது.

404 0

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” எனும் குறள் வழி தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் பால் போல் மனமும் .நீர் போல் தெளிவும் ,வார்த்தையில் இனிப்புமாய் சீரும் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது .கல்வி கலை பண்பாடு எனும் அசையாத விழுமியக் கற்கள் மூன்று .அதன் மேல் மண் பானை வைத்து முற்றத்தில் தமிழீழ வரைபட கோலமிட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் உணர்வுடன் ஒற்றுமை எனும் தீ மூட்டி அரிசியுடன் இட்ட பசும் பால் ஆதவன் வரும் திசை பார்த்து பொங்கி வழிந்தது இன்பப் பொங்கலாய்.

தமிழர் திருநாள் நிகழ்வுக்குள் செல்லும் முன் எங்கள் இனத்திற்காவும் , தமிழ் இனத்தின் இருப்புக்காவும் , தமிழர் பண்பாட்டு விழுமியங்களுக்காவும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காவும் வங்க கடலில் காவியமான தளபதி கேணல் கிட்டு உட்பட 9 வேங்கைகளின் 31 ஆம் ஆண்டை நினைவில் நிறுத்தி அந்த மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கத்துடன் ஆரம்பித்த விழா மங்கள விளக்கேற்றல் தமிழாலய கீதம் வரவேற்புரை வரவேற்ப்பு நடனம் என மேடை நிறைந்த பிள்ளைகளுடன் ஆரம்பமாகியது .ஒரு இனத்தின் அடையாளம் மொழி . அந்த தாய்மொழியை அகவை ஐந்து கூட நிரம்பாத மழலைச் செல்வங்கள் உரையாற்றலும் பாட்டுமாய் ஆடி அரங்கத்தை கரவொலியால் நிறைத்தார்கள்.உரையாடல் கவிதைகள் நாடகம் என நிகழ்ச்சி தொடர்ந்ததும் ஓர் அழகு .

அகவை முப்பதை கடந்த எமது தமிழாலயம் அன்று ஒரு சிறு அறையில் பாடசாலை ஆரம்பித்த போது பணியாற்ற வந்த மூத்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் அன்று மழலைகளாய் வந்து கல்வி கற்ற சிறார்கள் இன்று ஆசிரியர்களாய் பணியாற்றுவதும் அத்தோடு நிர்வாகத்தில் பொறுப்புகளை சுமந்து ஒரு தலை முறை கடந்த பெரு விருட்சமாய் பேர்லின் தமிழாயம் விளங்குவதற்கு ஒரு ஆழமான சான்றாகும் .

பொங்கல் நிகழ்வின் இறுதி நிகழ்வாக இடம்பெற்ற விடுதலை நடனம் மண்டபத்தில் உள்ள அனைவரையும் உணர்வுடன் பொங்கியெழ வைத்தது. சிறுவர்களுக்கான மதிப்பளிப்புகளுடன் அனைத்து நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது . காலத்தின் தேவையறிந்து அதற்கேற்ற அரசியல் விழ்ப்புணர்வு உரையும் மிகவும் சிறப்பாக அமைந்தது. இடைவேளையில் முக்கனியுடன் பொங்கலும் ,குழை சோறும் என விருந்தோம்பலுடன் விழா அகமும் புறமும் நிறைய இனிதே நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.