தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

219 0

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று தமிழக விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருந்தனர். அதன்படி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் இன்று திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்பிரஸ் ரெயிலை மறிக்க தமிழக விவசாயிகள் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் ரெயில் நிலையம் முன் திண்டு இருந்தனர்.

அவர்கள் கையில் துடைப்பம் கொண்டு வந்து இருந்தனர். அதனை தரையில் அடித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நதிகள் இணைப்பை தேசிய மயமாக்க வேண்டும். விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி உடனே நிறைவேற்ற வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கக்கரை சுகுமாறன் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை வேனில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.