குத்தாலம் அருகே கிராமங்களில் 2 மதுக்கடைகளை மூடி மக்கள் போராட்டம்

269 0

மது தட்டுப்பாட்டால் குத்தாலத்தை நோக்கி படையெடுக்கும் மதுப்பிரியர்கள். வெவ்வேறு கிராமங்களில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுபானக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டன. இதனால் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை நோக்கி பல்வேறு ஊர்களிலிருந்து குடிமகன்கள் குவிந்து வருகின்றனர். பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதுபான விற்பனை நடைபெறுகிறது.

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் மார்ச்.31-ம் தேதிக்கு பிறகு கத்திரிமூலை, கோமல் ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இக்கடைகளுக்கு கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை போன்ற ஊர்களிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தும் பயணம் செய்து வந்து மதுப்பிரியர்கள் மது வாங்கிச் செல்கின்றனர். மது வாங்கும் பலர் அங்கேயே அமர்ந்து அருந்துவதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக பெரும் அவதியடைந்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த கத்திரிமூலை மற்றும் கோமல் கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு திரண்டு கடையை முற்றுகையிட்டனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் வேறுவழியின்றி கடையை பூட்டிவிட்டு வெளியேறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாகவும், அதுவரை கடை திறக்கப்படாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் வெகு தூரம் பயணம் செய்து வந்தும் மது கிடைக்காததால் பலர் விரக்தி அடைந்தனர். தங்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த பின்னரே மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.