சென்னையில் இன்னும் 1 வாரத்தில் வெயில் 104 டிகிரியை தாண்டும்: வானிலை இலாகா தகவல்

214 0

கடற்காற்று குறைந்திருப்பதால் இன்னும் ஒரு வாரத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். 104 டிகிரியை தாண்டி விடும் என்று வானிலை இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோடை காலம் தொடங்கி இருப்பதால் அனைத்து இடங்களிலும் வெயில் வாட்ட ஆரம்பித்துள்ளது. இதுவரை கடல் காற்று ஓரளவு இருந்தது. இதனால் வெப்பநிலை சற்று தணிந்து இருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக கடல் காற்று குறைந்துவிட்டது. எனவே வெப்பமும் தொடர்ந்து அதிகரித்துபடி இருக்கிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதற்கு பிறகு இதுவரை இல்லாத வெப்பநிலை சென்னையில் நேற்று காணப்பட்டது.

மீனம்பாக்கம் பகுதியில் 100.4 டிகிரி வெப்பநிலை இருந்தது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை ஆகும். நுங்கம்பாக்கத்தில் 95.54 டிகிரி வெப்பநிலை நிலவியது.

கடற்காற்று குறைந்திருப்பதால் இன்னும் ஒரு வாரத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். 104 டிகிரியை தாண்டி விடும் என்று வானிலை இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 105.44 டிகிரி அளவுக்கு வெப்பநிலை இருந்தது. அந்த அளவிற்கு இப்போதும் வெப்பம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 1908-ம் ஆண்டு அதிகபட்சமாக 109.4 டிகிரி வெப்பநிலை இருந்தது ஆனால் அந்த அளவுக்கு வரும் வாய்ப்பு இல்லை என்றும் வானிலை இலாகா கூறியிருக்கிறது.

சென்னையில் இருந்து நாகப்பட்டிணம் வரையிலான கடற்கரை மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது வெப்பநிலை குறைவாகவே இருக்கும். குறிப்பாக சேலம், கரூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். அங்கு 104 டிகிரி வெப்பநிலை தற்போது உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

உள்மாவட்டங்களில் பல இடங்களில் சராசரி வெப்பநிலையை விட குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் அங்கும் மாற்றம் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா தெரிவித்தது.

வெப்பநிலை அதிகரித்து இருப்பதால் பறவைகளுக்கு உதவி செய்யும் வகையில் ஆங்காங்கே மொட்டை மாடி உள்ளிட்ட பகுதிகளில் பாத்திரத்தில் தண்ணீரை வைக்கவேண்டும் என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன. இதன்படி சென்னையில் பல இடங்களில் பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி வைத்துள்ளனர்.