சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு!

225 0

அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தமது மக்களுக்கும்  அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்தும் முன்னெடுப்பதானது , இரண்டு நாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான மேலதிக ஒத்துழைப்புக்கு அடிப்படையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டிருந்த யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக் என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் நேற்று புறப்பட்டுச் சென்றதை அடுத்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக் கொழும்பில் தரித்திருந்த போது, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு. ஒத்துழைப்பு ஆகியவற்றை மையப்படுத்தி, அமெரிக்க சிறிலங்கா கடற்படை மரைன் படையினர் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த 12 மாத காலத்துக்குள் அமெரிக்க, சிறிலங்கா மரைன் படையினருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இராணுவ- இராணுவ இடையிலான பயிற்சி ஒத்திகை இதுவாகும்.

இந்தப் பயிற்சியில் 325 அமெரிக்க கடற்படையினர் மற்றும் மரைன் படையினரும், சிறிலங்காவின் 175 கடற்படையினர் மற்றும் மரைன் படையினரும் ஈடுபட்டனர்.

யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்கில் உள்ள அமெரிக்க மரைன் படையினர், சிறிலங்கா மரைன் படையினருக்கு உயிர்காப்பு, தொடரணி நடவடிக்கைகள், மனிதாபிமான உதவி, மற்றும் அனர்த்த மீட்பு, ஈரூட வாகன நகர்வு உள்ளிட்டவற்றில் பிந்திய தந்திரோபாயங்களையும், கருவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். என்றும் அமெரிக்க தூதரக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.