ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் கமிஷன் அதிரடி அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

213 0

* பணப்பட்டுவாடா கும்பலை பிடிக்க புது திட்டம்
* சிறிய தெருக்களில் கூட தனிக்குழு பைக்கில் ரோந்து
* அமைச்சர்கள் கார்களை சோதனை செய்ய உத்தரவு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு தெருத்தெருவாக கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அங்கு வரும் 12ம் தேதி இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் நூதன முறையில் பணம் வழங்குவதாகவும், இதை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், தேர்தல் அதிகாரி பத்மஜா ஆகியோர் மாற்றப்பட்டனர்.இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள உயர் அதிகாரிகள் குழுவை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 30ம் தேதி அனுப்பியிருந்தது. இந்த குழுவினர் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் நேற்று அளித்தனர்.
இதையடுத்து தேர்தல் ஆணைய இயக்குநர் திரேந்திர ஓஜா நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:* ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பணிக்காக வருவாய் துறையிலிருந்து உதவி தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட அனைவரையும் மாற்ற வேண்டும். * காவல் துறையில் கூடுதல் ஆணையர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அனைத்து அதிகாரிகளையும் மாற்ற வேண்டும்.

* ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கனவே 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும், கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். * சிறு தெருக்கள் மற்றும் சந்துக்களில் சென்று ஆய்வு மேற்கொள்ள மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று கண்காணித்து, தேர்தல் பார்வையாளர்களுக்கு உதவியாக செயல்பட வேண்டும்.
* அனைத்து தெருக்களிலும் கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

* செக் போஸ்ட்கள் அமைத்து ஆர்.கே. நகர் தொகுதிக்கு செல்லும் அனைத்து ரோடுகளையும் காவல்துறை உதவி ஆணையர் கண்காணிக்க வேண்டும்.

* பறக்கும் படையினர் கூடுதலாக நியமிக்க வேண்டும். மொத்தம் 10 பறக்கும்படையினர் 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். பறக்கும்படையினரிடம் ஜிபிஎஸ் கருவி கொடுத்து அவர்களை மத்திய அரசு ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும்.

* தேர்தல் நாள் அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்த வேண்டும். வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் வெப் கேமிராக்கள் பொருத்தி  தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க வேண்டும்.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

* பறக்கும் படையினைரை வலுப்படுத்த ஆந்திர மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து தமிழ் தெரிந்த தாசில்தார் அல்லது துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

* தமிழக அரசின் எந்தத்துறை வாகனங்களும், அரசியல் கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களும் ஆர்.கே.நகர் தொகுதியில் செல்ல அனுமதிக்கக் கூடாது. அனைத்து வாகனங்களிலும் தயக்கமின்றி சோதனை செய்ய வேண்டும்.

* மாவட்ட தேர்தல் அதிகாரி  மற்றும் போலீஸ் கமிஷனர் தினந்தோறும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தேர்தல் ஏற்பாடு விவரங்களை விளக்க வேண்டும்.

* அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் தினந்தோறும் சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவால் ஆர்.கே.நகர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

115 எஸ்ஐக்கள் மாற்றம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வெளியான சில நிமிடங்களில் சென்னையில் உள்ள 115 எஸ்.ஐ.க்களை அதிரடியாக மாற்றி போலீஸ் கமிஷனர் கரன் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதில், ஆர்.கே.நகரில் பணியாற்றிய எஸ்.ஐ.க்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.