கற்கும்போதே தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டும்

269 0

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் என்பன எமது அமைச்சின் கடமை என கல்வி இராஐங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் விசேட கல்வி தேவை உடையவர்களுடைய மாணவர்கள் கடந்த ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மட்டச் சாதனையினை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ் முத்துதம்பி மகா வித்தியாலயத்தில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி இராஐங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். இதில் விசேட தேவையுடைய 05 மாணவர்களில் தமிழ் அறிவு வினா விடைபோட்டி, மற்றும் சித்திர போட்டிகளில் அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் முதலாம், இரண்டாம், முன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இந்த கௌரவிப்பும், விருதுகளும் நினைவுச் சின்னங்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் பாடசாலைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆட்சி மாற்றத்துக்கு வடக்கு மக்களே அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.
வடக்கில் கல்வித் தரம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. எல்லா அமைச்சுக்களும் இணைந்து பணியாற்றினால் மாத்திரமே நாடு முன்னேற்றம் அடையும். கல்வியிலும் உயர் நிலையை அடைய முடியும்.

கல்வியைக் கற்றோம், பட்டம் பெற்றோம், அதன் பின்னர் வேலை கேட்டு போராட்டம் என்று இருக்கக் கூடாது. அதற்காக கல்வியைக் கற்கக் கூடாது. கற்கும்போதே எமக்கான தொழிற்கல்வியையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் இணைபாட விதானத்தில் தொழிற் கல்வியைக் கற்பதன் ஊடாக, சாதாரண தரத்தில் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கக் கூடிய வாய்ப்பு அடுத்த ஆண்டிலிருந்து கிடைக்கும். இதற்காக கல்வி அமைச்சு ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று தெரிவித்தார்.