ராமமோகனராவுக்கு பணி வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

249 0

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் பரபரப்புக்குள்ளான வருமான வரித்துறை சோதனைக்குள்ளாகி, காத்திருப்புப் பட்டியலில் ஏறக்குறைய 3 மாதங்களாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவுக்கு அ.தி.மு.க. அரசு மீண்டும் பணி வழங்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் தன்மானச் சின்னமாக விளங்கும் தலைமைச்செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையிலேயே வருமான வரித்துறை சோதனை நடந்தது.

வருமான வரி சோதனைக்குப் பிறகு தி.மு.க.வும், மற்ற கட்சிகளும் முன்வைத்த கோரிக்கைகளால் வேறுவழியின்றி ராமமோகன ராவ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து 22-12-2016 அன்று மாற்றப்பட்டார். ஆனால் முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தவரை அவர் மீது வேறு எந்த விதமான துறை ரீதியான நடவடிக்கையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. சோதனை நடைபெற்றபோது முதல்-அமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் அதுபற்றி கருத்தும் கூறவில்லை. சட்டமன்றத்தில்கூட இந்த சோதனை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு ராமமோகன ராவ் சோதனை பற்றிய ரகசியத்தை சிரமேற்கொண்டு காப்பாற்றினார் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று எப்படி ‘எனக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பில்லை’ என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறாரோ அதே மாதிரிதான் இந்த ராமமோகனராவும் பேட்டியளித்தார். மணல் மாபியா சேகர் ரெட்டி 2-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த சோதனையில் தொடர்பு உடையவர் என்று சந்தேகப்பட்டு, மாநிலத்தின் தலைமைச் செயலகத்திலேயே அவரது அலுவலகத்தை சோதனை செய்துவிட்டு இன்றைக்கு அவருக்கு மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால் இது நிர்வாக அலங்கோலமா? அல்லது அவரை காப்பாற்றும் முயற்சியா? என்ற கேள்வி எழுகிறது.

யாருக்கு விடுத்த மிரட்டலால் இப்போது ராமமோகன ராவிற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது?. எல்லாமே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் போலவே தொடருகிறது. எங்கும் பேசப்பட்ட ஒரு வருமான வரித்துறை சோதனையில் எந்தவித நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் 3 மாதங்களுக்குள் மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால், ராமமோகனராவுக்கு மாநிலத்தில் உள்ள ஆட்சியில் மட்டுமல்ல, மத்தியிலும் எப்படிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது 20-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை புறக்கணித்துவிட்டு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராமமோகன ராவ் அ.தி.மு.க. அரசின் நிழலில் நிம்மதியாக பவனி வருகிறார் என்பது வேதனையாக இருக்கிறது. ஆனால் நடப்பவற்றை நாட்டு மக்கள் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மணல் மாபியா சேகர் ரெட்டிக்கும், ராமமோகன ராவுக்கும் உள்ள தொடர்பு என்ன?. எதற்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகமும், வீடும், அவரது மகன்களின் வியாபார நிறுவனங்களும் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களை பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டன?. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எல்லாம் என்ன ஆயிற்று?. ஏன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை?. நேர்மையாளராக கருதப்படும் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எப்படி இப்படியொரு பணி நியமன அரசு ஆணை வெளியிட ஒப்புக்கொண்டார்? என்பது பற்றி எல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரைவாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராமமோகன ராவிற்கு மீண்டும் பணி வழங்க ஏற்பட்ட நெருக்கடியும், நிர்ப்பந்தமும் என்ன என்பதை தமிழக மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.