மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீசு

273 0

சின்னத்தை தவறாக பயன்படுத்துவதாக வந்த புகார் பற்றி விளக்கம் அளிப்பதற்கு மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு இந்திய தேர்தல் கமிஷன் செயலாளர் மலேய் மாலிக் அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உங்கள் அணிக்கு மின் கம்பம் சின்னமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை இரட்டை விளக்கு என்று உள்நோக்கத்தோடு, வாக்காளர்கள் மனதில் பழைய சின்னமான இரட்டை இலை சின்னம் என்று பதியும் வகையில் பிரசாரம் செய்து வருவதாக புகார் வந்துள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியது. ஊடகங்கள் மற்றும் போஸ்டர்களில் வந்த தகவல்கள் சரி பார்க்கப்பட்டன.

எனவே அந்த புகாரில் பொருள் இருப்பதாக தேர்தல் கமிஷனர் உணர்கிறது. தேர்தல் விதிகளின்படி எந்தவொரு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. வாக்காளர்களை குழப்பும் வகையில் தவறான தகவல் தரக்கூடாது என்று சட்டவிதிகள் கூறுகின்றன.

எனவே இந்த புகார் பற்றி விளக்கம் அளிப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. உங்கள் விளக்கம் 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு முன்பாக வந்து சேரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.