மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி

50 0

மன்னார் – கட்டையடம்பன் பகுதியில் வனவள திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் மக்கள் உளுந்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வனவளத் திணைக்களம் மரம் நடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் பயன்படுத்திய காணியினை அண்மையில் வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்தது காடாக மாற்றி மரம் நடும் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கீடு செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் கட்டையடம்பன் பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் வனவள திணைக்களத்திற்கு இடையில் முரண்பாடு நிலவி வந்தது.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கே. திலீபன் வனவளத் திணைக்களத்தினரோடு மேற்கொண்ட கலந்துரையாடல் அடிப்படையில், மாவட்ட அரசாங்க அதிபர் சிபாரிசு செய்யும் பட்சத்தில் குறித்த காணிகள் மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக வனவள திணைக்களத்தினர் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மாவட்ட செயலகம் காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக காடாக மாற்றுங்கள் என்கிற அர்த்தத்துடன் வனவள திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியதாக வனவள திணைக்களம் தெரிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் தொடர் முயற்சி காரணமாக வனவள திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் மக்கள் உளுந்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வனவளத் திணைக்களம் மரம் நடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் குறித்த காணியை பராமரிப்பதற்கு என்றும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கும் என ஒரு தொகை பணமும் அப்பகுதி மக்களுக்கு வனவள திணைக்கள அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி உதவி வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. திலீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சீவரட்ணம் (கி.பி), மன்னார் மாவட்ட இளைஞரணி உதவி நிர்வாகச் செயலாளர் சீலன் மற்றும் செல்வகுமார், விஜயகாந்த், மரியசெல்வம் உட்பட பயனாளர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.