அரசாங்க காணிகளை தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர்கள் ஐவர் இன்று சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் போல் நடித்து அரசாங்க காணிகளை விலைக்கு பெற்றுத்தருவதாக கூறி குருநாகல் ரிதிகம, தொடங்கஸ்லந்த பிரதேச மக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் மாத்தளை மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 30 , 33, 27 , 48 , 65 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
காணி வழங்குவதாக கூறி ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாகபொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் இது தொடர்பில் காணி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது கைதானவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்ற ஸ்டிக்கர்கள் மற்றும் பெயர் பலகைகளை காட்சிப்படுத்தியவாறு வேனில் ரிதிகம கோவிலுக்கு சென்றதாகவும் காணி திணைக்களம் என எழுதப்பட்ட ஆடைகளை அணிந்திருந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சந்தேகநபர்கள் ஐவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

