வடமாகாண சிறுவர் இல்லங்கள் உடனடியாக புதிய சட்டங்களின் கீழ் பதியப்படவேண்டும் -ஆணையாளர்

537 0
வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச் சட்டத்தின் கீழ் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் என நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள வடமாகாண  ஆணையாளர் ரி. விஷ்பரூபன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்ல முகமையாளர்களுக்கும் ஆணையாளரிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அதன் போதே மேற்குறித்த அறிவித்தல் ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் குறித்து ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில்
வடக்கு மாகாண சபையால் 2016 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்கிகரிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச்சட்டத்துக்கு, வடமாகாண ஆளுநரால் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இச்சட்டம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. மேற்படி சட்டமானது  1941 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க அனாதைகள் இல்ல கட்டளைச்சட்டத்துக்கு ஒவ்வாததாகும். அதனால் முன்னைய சிறுவர் இல்ல பதிவுகளும் செல்லுபடியற்றதாகும்.
எனவே இப் புதிய சட்டத்தின் கீழ் உடனடியாக சிறுவர் இல்லங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் சிறுவர் இல்லங்களுக்கு ஆரம்பத்தில் 6 மாதகால தற்காலிக அனுமதி வழங்கப்படும். பின்னர் 3 வருடத்துக்கான பதிவுச்சான்றிதள் வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பௌதீக மாற்றம், கணக்கு அறிக்கைகள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த நியதிச்சட்டம் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு வலுச்சேர்ந்துள்ளதுடன் சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் தொடர்ச்சியாக இருப்பதனை குறைத்து சமூகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படுவது இந்த நியதிச்சட்னத்தின் சிறப்பாக கருதப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.